எமது VEDA கல்வி நிலையமானது 2011 ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு பொது அமைப்பாகும்.
வல்வை நகரில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளினாலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட வல்வை மாணவர்களின் கல்வி நிலையினை சீர்தூக்கி ஓர் உன்னத வளர்ச்சிப்போக்கினை எற்படுத்தும் நோக்கிலே பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் வல்வை மக்களால் VEDA கல்வி நிலையமானது ஆரம்பிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் மிகவும் குறைவான மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட VEDA கல்வி நிலையமானது படிப்படியாக வளர்ச்சிப் போக்கினை எய்தி இன்று 455 மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையமாக வல்வை மண்ணில் மிளிர்கின்றது.
அது மட்டுமன்றி VEDA கல்வி நிலையத்தில் பல பிரபல முன்னணி ஆசிரியர்களினைக் கொண்ட உயர்தரத்திற்கான கணித, விஞ்ஞான பிரிவுகளும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடமும் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவது VEDA கல்வி நிலைய வளர்ச்சியினை எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு கல்விப் பாதையில் தன்னை உறுதியாக தடம்பதித்த எமது VEDA கல்வி நிலையத்தின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வல்வை வாழ் மக்களினதும், புலம்பெயர்வாழ் வல்வை மக்களினதும் பங்களிப்புக்கள் மகத்தானதாகும். இவர்கள் அனைவரினதும் பாரிய ஒத்துழைப்பு எமது VEDA கல்வி நிலையத்தின் பாரிய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிகோலியது எனக் கூறின் மிகையல்ல.
எமது கல்வி நிலையத்தைப் பொறுத்த வரையில் கொற்றங்கலட்டி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் முகவரியில் அமைந்துள்ளதே VEDA கல்வி நிலையமும் அதன் நிர்வாக மையமும் ஆகும்.
வல்வை மாணவர்களுக்கு உயர்தர கணித விஞ்ஞான வகுப்புக்கள் நீண்டகாலம் வல்வையில் இயங்காத நிலையில் 2015 ஆண்டு VEDA கல்வி நிலையத்தில் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் பல வல்வை மாணவர்கள் கணித விஞ்ஞான துறைகளில் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இவையாவும் வல்வை மக்கள் மற்றும் வல்வை நலன்புரி சங்கங்களில் பங்களிப்பினாலேயே நடைபெற்றது.
VEDA கல்வி நிலையத்தில் கடந்த 29ம் திகதி (2023.01.29) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.40 மணியளவில் தற்காலிகத் தலைவர் திரு.N.ரஞ்சித் ஜெகமோகன் தலைமையில் இறை வணக்கத்துடன் பொதுக் கூட்டம் ஆரம்பமானது.